பிரான்ஸில் திடீரென சோதனையிட்ட பொலிஸாருக்கு கிடைத்த பொருளால் அதிர்ச்சி!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியான Stains (Seine-Saint-Denis)இல் 700 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி அளவில் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்குள்ள கட்டிடத்தின் அருகே BAC காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நபர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். குறித்த கட்டிடத்தின் வாகன தரிப்பிடத்தில் இருந்த ஒருவர் அங்கும் இங்குமாக நடந்து சென்று பதட்டமாக இருந்துள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை நெருங்கினர். இந்நிலையில் குறித்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முற்பட்டபோது, பொலிஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அப்பகுதியை சோதனையிட்டபோது, வாகன தரிப்பிடத்துக்கு அருகே உள்ள நிலகீழ் அறை ஒன்றுக்குள் பல்வேறு பயண பொதிகள் இருப்பதை கவனித்துள்ளனர். அவற்றை சோதனையிட்டபோது அதற்குள் கஞ்சா போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
மொத்தமாக 700 கிலோ கஞ்சா அதில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.