கால்பந்தாட்ட வீரரின் திருமண நிகழ்வில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்: வீரருக்கு பதில் சகோதரன்
ஆபிரிக்காவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் ஒருவர் தனது திருமண வைபவத்தில் பங்குபற்ற முடியாத நிலையில் தனக்கு பதிலாக தனது சகோதரனை அவ் வைபவத்தில் பங்குபற்றச் செய்துள்ளார்.
மொஹம்மத் புயா துராய் எனும் 27 வயதான கால்பந்தாட்ட வீரர் ஆபிரிக்க நாடான சியாரா லியோனைச் சேர்ந்த இவர் 6 சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளார்.
சீனாவின் பிரபல கால்பந்தாட்டக் கழகங்களில் ஒன்றான ஹெனான் சோங்ஷான் லோங்மென் கழகத்தில் விளையாடி வந்த இவர் அண்மையில் சுவீடனின் மெல்மே கால்பந்தாட்டக் கழகத்துக்கு இடம்மாற்றப்பட்டார். இதற்கிடையில் துராயின் திருமண திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தனது கழகத்தில் இணையும் புதிய வீரர்கள், ஐரோப்பிய கழகங்களின் தகுதிகண் போட்டிகளுக்காக பயிற்சி முகாமில் இணைய வேண்டிய தினமாக ஜூலை 21 ஆம் திகதியை மெல்மோ கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. அதே தினத்திலேயே துராயின் திருமணமும் சியாரா லியோனில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது,
தனது கால்பந்தாட்ட வாழ்க்கையின் திருப்புமுனையாக அமையும் சுவீடன் கழகத்தில் இணைவதா தனது திருமண வைபவத்தை திட்டமிட்டபடி நடத்துவதா என துராய் குழம்பினார்.
இது தொடர்பாக தனது எதிர்கால மனைவியுடன் கலந்துரையாடியபோது மெல்மோ கழகத்தினரையும் திருப்திபடுத்தும் அதேவேளை தனது திருமண வைபவத்தையும் குழப்பாமல் இருப்பதற்காக துராயும் அவரின் மணமகளும் இணைந்து திட்டமொன்றை தீட்டியுள்ளனர்..
இது தொடர்பாக மொஹம்மத் புயா துராய் கூறுகையில் "நான் சுவீடனுக்குச் செல்வதற்கு முன்னதாக, திருமண வைபவ புகைப்படங்களை நாம் முன்கூட்டியே பிடித்துக்கொண்டோம். எனவே நான் அவ் வைபவத்தில் பங்குபற்றாத போதிலும் அங்கு இருந்ததைப் போல் தோன்றியது" எனத் தெரிவித்துள்ளார்.
திருமண வைபவத்தில் தனக்கு பதிலாக தனது சகோதரரை பங்குபற்றச் செய்தாராம் துராய்.
திருமண வைபவத்தின் பின்னரும் துராயை அவரின் மனைவி இன்னும் நேரில் சந்திக்கவில்லை. மெல்மோகழகத்துக்காக உற்சாகமாக கால்பந்தாட்டப் போட்டிகளில் துராய் பங்குபற்றி வருகிறார். மெல்மோ கழகத்துக்காக அவர் பங்குபற்றய முதல் போட்டியில் அக்கழகம் 3:0 கோல்களால் வென்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது தனது மனைவியை சுவீடனுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைளிலும் தீவிரமாக அவர் ஈடுபட்டுள்ளார்.
"சுவீடனின் மெல்மோ நகருக்கு அழைத்துவிட்டால், அவர் என்னோடு நெருக்கமாக இருக்கலாம். இது தான் இப்போதைய எனது இலக்கு" என்கிறார் துராய்.
"முதலில் நாம் லீக் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதன் பின்னர் நான் தேனிலவுக்குச் செல்வேன்" என்கிறார் மொஹம்மத் புயா துராய்.