சர்வதேச அளவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதற்காகவே வளர்க்கும் கும்பல்; அதிர்ச்சித்தகவல்
கானா நாட்டில் குழந்தைகளை வளர்த்து, விற்பனை செய்யும் சட்டவிரோத கும்பல் பற்றிய தகவல் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் குழந்தைகளை கடத்தி, விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் கடத்தல் கும்பல் பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
அவர்களை கண்டறிந்து கைது செய்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசும் எடுத்து வருகிறது. ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் குழந்தைகளை வளர்த்து, பின்னர் அவர்களை விற்பனை செய்யும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் கும்பலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபோன்ற குழந்தைகளை பின்னாளில் குழந்தை தொழிலாளர்களாக பணியமர்த்துவது, கொத்தடிமைகளாக நடத்துவது, வீட்டு வேலை, பாலியல் தொழில் போன்றவற்றில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விற்கும் அவல நிலை ஏற்படுகிறது. இதுபற்றி அந்நாட்டின் பொருளாதார மற்றும் குற்ற அலுவலக அதிகாரிகளும், மருத்துவ மற்றும் பல் மருத்துவ கவுன்சிலும் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020ம் ஆண்டில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான கூட்டு விசாரணையின் ஒரு பகுதியாக, அதிரடி குற்ற ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக, குழந்தைகளை வளர்த்து மற்றும் குழந்தை கடத்தலில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலில் 2 மருத்துவர்கள், 4 செவிலியர்கள், சமூக நல பணியாளர் ஒருவர் மற்றும் குறிப்பிட்ட பணியெதிலும் ஈடுபடாத 2 தனிநபர்களும் அடங்குவர்.
இந்த அதிரடி நடவடிக்கையில், கடந்த அக்டோபரில் தலைநகரில் செயல்படும் ராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஹோப் மென்சா குவாரசி, 4 நர்சுகள் மற்றும் அவர்களது கூட்டாளி ஒருவர் ஆகியோர் ஹோப்பின் தனியார் கிளினிக்கில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கூட்டு விசாரணை குழுவிடமே ஒரு குழந்தையை விற்றுள்ளனர். இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், இந்த மாத தொடக்கத்தில் அக்ரா மண்டல மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் நோவா கோபி லார்தே மற்றும் அவரது இரு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
குழந்தையை வாங்குவதற்காக, விசாரணை அதிகாரிகள் நோவாவின் இரண்டு கூட்டாளிகளை அணுகியுள்ளனர். அவர்கள், விசாரணை அதிகாரிகளை டாக்டரின் தனியார் கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளனர். டாக்டர் அவர்களிடம் பிறந்த குழந்தை ஒன்றை விற்பனை செய்துள்ளார்.
அதன்பின் அவர்கள் அனைவரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.