பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு ; இருவர் உயிரிழப்பு
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஜம்போங்கா நகரில் உள்ள Ateneo de Zamboanga பல்கலைக்கழகத்துடன் இணைந்த தனியார் பாடசாலையிலேயே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, துப்பாக்கியுடன் பாடசாலை வளாகத்துக்குள் நுழைந்த நபர் ஒருவர், வகுப்பறையில் இருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் 10ஆம் தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படும் 9ஆம் தர மாணவர், பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து பாடசாலை வளாகத்தில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் பிலிப்பைன்ஸில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இரண்டாவது துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இதுவாகும்.
இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் மத்திய பிலிப்பைன்ஸின் டக்லோபன் நகரில் உள்ள பொது உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூன்று மாணவர்கள் உயிரிழந்ததுடன், சுமார் 20 பேர் காயமடைந்திருந்தனர்.
பிலிப்பைன்ஸில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான விதிமுறைகள் அமுலில் உள்ள போதிலும், சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாடசாலைகளில் வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாடசாலைகள் மாணவர்கள் கல்வி கற்கவும், வளரவும், எதிர்காலம் குறித்து கனவு காணவும் பாதுகாப்பான இடங்களாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.