இஸ்ரேலில் மேற்குக்கரை அருகே துப்பாக்கிச் சூடு தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் காயம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலின் மூன்று பகுதிகளில் சிற்றூந்து மூலம் வந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 35 வயதுடைய சிவிலியன் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். மேற்குக்கரையின் கல்கிலியா (Qalqilya) நகருக்கு அருகிலுள்ள கொச்சாவ் யாயிர் (Kochav Yair) மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

சம்பவம் இடம்பெற்றதும், பாதுகாப்பு படையினர் சந்தேகநபரை துரத்திச் சென்றுள்ளனர். பின்னர் அந்த துப்பாக்கிதாரியை சுட்டுக் கொன்று, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் வாகனத்தையும் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரும் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது அவர் கண்ணாடிப் போத்தலால் காவல்துறையினரை தாக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்த ஐந்து பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக இஸ்ரேலின் அவசர ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி அரபு மக்கள் அதிகமாக வாழும் தாயிபே (Tayibe) நகரைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவில்லை. எனினும் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தாக்குதலைப் பாராட்டியுள்ள போதிலும் அதற்குப் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.