உலகையே வியப்பிலும் குழப்பத்துக்கும் ஆளாக்கிய ஒற்றை பென்குயின் ; வைரலாகி வரும் வீடியோ
தன்னுடைய கூட்டத்தைவிட்டு தனியே சென்ற ஒரு பென்குயின் உலகளவில் பலருக்கும் ஊக்கமளிப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளரான வெர்னர் ஹெர்சாக், கடந்த 2007 ஆம் ஆண்டில் பென்குயின்களை ஆவணப் படம் செய்வதற்காக அண்டார்டிகா சென்றார்.
அண்டார்டிகாவில் பென்குயின்களின் கூட்டத்தைக் கண்ட ஹெர்சாக், அவைகளின் கூட்டத்தில் இருந்து ஒரு பென்குயின் மட்டும் விலகிச் செல்வதைக் கண்டு வியப்புற்றார்.
தனது கூட்டத்தினை விட்டுவிட்டு, 70 கி.மீ. தொலைவில் இருந்த மலைப் பகுதியை நோக்கி அந்த பென்குயின் நடக்கத் தொடங்கியது. பென்குயின் வழிதவறி சென்றிருக்கும் என்ற ஐயத்தில், அந்த பென்குயினை மீண்டும் அதன் கூட்டத்துடனேயே சேர்த்து விட்டனர்.

இருப்பினும், மலைப் பகுதியை நோக்கியே பென்குயின் சென்றது. தொடர்ந்து, உணவுப் பொருள்கள் மூலம் பென்குயினை திசைதிருப்ப முயன்றபோதிலும், மலையை நோக்கியே அந்த பென்குயின் சென்றது குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்பியது.
இந்த நிலையில், 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த விடியோ தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த விடியோவைக் குறிப்பிட்டு, கேள்வியும் அதற்கு விளக்கமும் அளித்து வருகின்றனர்.
தனது குடும்பம் மற்றும் கூட்டத்தை விட்டுவிட்டு ஏன் அந்த பென்குயின் தனியே செல்ல வேண்டும்? மற்றவர்கள்போல் தானும் சாதாரண வாழ்க்கையை விரும்பாமல், பென்குயின் ஏதோ ஒன்றைத் தேடிச் செல்கிறதா? அதற்கு ஏதேனும் மனச் சோர்வா? பைத்தியக்காரத்தனமா? வாழ்க்கைத் தத்துவம் ஏதேனும் அறிந்த பென்குயினா? என்றெல்லாம் சமூக ஊடகங்களில் இணையவாசிகள் கருத்துகளும் கேள்விகளும் எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே, சிலர் தங்களின் வாழ்க்கையை இந்த பென்குயினுடன் ஒப்பிட்டுக் கொண்டும் வருகின்றனர்.