கனடா ஆயுதப்படைகளில் சேர விண்ணப்பங்கள் உயர்வு
பல ஆண்டுகளாக இலக்குகளை எட்ட முடியாமல் இருந்த கனடா ஆயுதப்படைகள் தற்போது ஆட்சேர்ப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன.
பணியாளர் பற்றாக்குறை, ஊதிய குறைகள் மற்றும் நீண்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகள் காரணமாக புதிய உறுப்பினர்களை ஈர்க்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது விண்ணப்பங்கள் அதிகரித்து வருவது இராணுவத்திற்கு ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
2025–26 நிதியாண்டில் இதுவரை நிரந்தர படைப்பிரிவுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 13 சதவீதம் உயர்ந்துள்ளன.

இதற்கு முன் ஆண்டில், புதிய ஆட்சேர்ப்புகள் 55 சதவீதம் உயர்ந்ததாகவும், 2025 டிசம்பர் வரை 6,700 பேர் நிரந்தர படைப்பிரிவில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது கடந்த ஒரு தசாப்தத்தில் பதிவான அதிகபட்ச சேர்க்கையாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கிரீன்லாந்தை கைப்பற்றுவது குறித்த கருத்துகளையும், ஆர்க்டிக் பகுதியின் தேசிய பாதுகாப்பு முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ள நிலையில், இந்த ஆட்சேர்ப்பு உயர்வு கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இருப்பினும், கனடாவின் தெற்குப் பக்க அண்டை நாட்டுடனான பதற்றமே இதற்கான நேரடி காரணம் என கூறுவதில் இராணுவம் தயக்கம் காட்டியுள்ளது.
“விண்ணப்பங்கள் அதிகரிப்பதை ஒரு குறிப்பிட்ட சம்பவத்துடன் நேரடியாக இணைப்பது கடினம். கடந்த நான்கு ஆண்டுகளாக உருவாகி வந்த போக்கின் தொடர்ச்சியே இந்த உயர்வு,” என குறிப்பிடப்பட்டுள்ளது.