அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து ; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
அட்லாண்டிக் பஹாமாசில் சிறிய ரக தனியார் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கரீபியன் தீவு நாடான பஹாமாஸ், உலகின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 80 வயதான மரியோ லமர், அவரது 79 வயது மனைவி லில்லி லமர் மற்றும் அவர்களது பேரப்பிள்ளைகளான 28 வயதான சோபி சோசா, 22 வயதான கிறிஸ்டின் சோசா ஆகியோர் சிறிய ரக தனியார் விமானம் மூலம் பஹாமாசுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
விமானத்தை 40 ஆண்டுகள் விமானி அனுபவம் கொண்ட மரியோ லமர் இயக்கியுள்ளார். சுற்றுலாவை முடித்த பின்னர், கடந்த திங்கட்கிழமை மதியம் அண்ட்ரோஸ் தீவில் உள்ள விமான நிலையத்திலிருந்து நால்வரும் விமானத்தில் புளோரிடாவின் மியாமி நகரை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அண்ட்ரோஸ் தீவிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோர விபத்தில் மரியோ லமர், அவரது மனைவி லில்லி லமர் மற்றும் அவர்களது பேரப்பிள்ளைகளான சோபி சோசா, கிறிஸ்டின் சோசா ஆகிய நால்வரும் உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் கடலில் விழுந்த விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் நால்வரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.