அபராதம் செலுத்த நேரலாம்: ரொறன்ரோ மக்களுக்கு அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை
பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் வாகனங்களை இடம் மாற்றி, பனியை அகற்ற ஒத்துழைக்குமாறு ரொறன்ரோ மக்களுக்கு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெறும் 16 மணி நேரத்தில் 30செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. மட்டுமின்றி பனிப்புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டது.
இந்த நிலையில், ரொறன்ரோவில் பனிப்புயல் நிலை அறிவிக்கப்பட்டதுடன், சாலைகளில் இருந்து பனியை அகற்றும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டது. ஊழியர்கள் பனியை அகற்றும் பகுதிகளில் வாகனங்களை மக்கள் நிறுத்த வேண்டாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பனி குவிந்து காணப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், வாகனங்கள் நிறுத்துவதற்கும், பாதசாரிகள் நடமாடுவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் பனியானது உரிய பகுதிகளில் கொட்டப்படும் எனவும், மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பனிப்பொழிவு தொடர்பான பிரச்சனைகளை ரொறன்ரோ மக்கள் 311 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், பனி அகற்றுவதற்காக திட்டமிடப்பட்டுள்ள ரொறன்ரோ நகரின் 150 பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு,
முறையாக கோரிக்கை விடுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்த மறுக்கும் உரிமையாளர்களுக்கு 200 டொலர் வரையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர்களின் வாகனங்கள் அதிகாரிகளால் அகற்றப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2022 ஜனவரி மாதம் இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டு பனி அகற்றுவதற்காக நகர நிர்வாகம் சுமார் 17 மில்லியன் டொலர்கள் வரையில் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.