கனடாவின் இந்தப் பகுதிகளில் பனிப் புயல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
கனடாவின் மத்திய ஒன்டாரியோ மற்றும் வடமேற்கு கியுபெக் பகுதிகளில் கடும் பனிப்புயல் தாக்கம் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒன்டாரியோவில் இந்த பனிப்புயல் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் 30 முதல் 50 செ.மீ. வரை பனிப்பொழிவு பதிவாகக்கூடும். சில இடங்களில் இதைவிட அதிகமாகவும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடக்குத் திசையில் இருந்து வீசும் காற்று வேகம் 50–60 கிமீ/மணி வரை இருக்கும் என்றும், Lake Nipigon-க்கு தெற்கான பகுதிகளில் 70 கிமீ/மணி வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பலத்த வடக்குக் காற்றும் கனமழை போன்ற பனிப்பொழிவும் சேர்ந்து, சில நேரங்களில் வீதிகளில் கடும் பனிமூட்டம் நிலவும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சாலைகள் மற்றும் நடைபாதைகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும், திடீரென பார்வைத் தூரம் மிகக் குறையக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசியமற்ற பயணங்கள் மற்றும் வெளிப்புற செயல்பாடுகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகள் மற்றும் மின் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும்; அதற்காக முன் தயாராக இருக்க வேண்டுமென கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.