கொழும்பில் திடீரென களமிறக்கப்பட்டுள்ள படையினர்!
புகையிரத ஊழியர்களின் பாதுகாப்பு கருதி கொழும்பு கோட்டை மற்றும் மருதானை இரயில் நிலையங்களில் இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
புகையிரத சாரதிகள் சங்கத்தினரால் ஸ்தம்பித்த சேவை
இதற்கமைய பயணிகள் புகையிரதசேவை, பொருள் விநியோகம் ஆகிய சேவைகள் புகையிரதத் திணைக்களத்தினாலும் அதனுடன் இணைந்த சேவைத் துறையினராலும் தடையின்றி, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் சங்கத்தினர் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தி ஈடுபட்டனர்.
இதன் காரணமாக நேற்றையதினம் புகையிரதசேவை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.