பாரிஸ் ஒலிம்பிக்கில் தென்கொரியா வடகொரியா ஆனது!
பிரான்ஸ் பாரிசில் 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமானது.
இந்நிலையில் ஆரம்ப விழாவில் தென்கொரிய போட்டியாளர்கள் தவறுதலாக வடகொரிய போட்டியாளர்கள் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் வருத்தமடைந்துள்ள தென்கொரியா, இனிமேல் இத்தகைய தவறு நிகழாது என உறுதியளிக்கும்படி போட்டி ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அறிவிப்பாளர் தவறுதலாக அறிமுகம்
செய்ன் ஆற்றின் வழியாக தென்கொரிய வீரர்கள் இருந்த படகு சென்றபோது, அவர்களை வடகொரிய வீரர்கள் என அறிவிப்பாளர் தவறுதலாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
வடகொரிய விளையாட்டாளர்களின் படகு சென்றபோதும் அவர் அவ்வாறே குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, பாரிஸ் சென்றிருக்கும் தென்கொரிய விளையாட்டு, கலாசார இணை அமைச்சர் ஜேங் மி ரன், அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் தாமஸ் பாக்கைச் சந்திக்க முயன்று வருகிறார்.
தென்கொரிய ஒலிம்பிக் மன்றமும் உடனடியாக இத்தவறு குறித்து போட்டி ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்குக் கொண்டுசென்றது. இனிமேல் அத்தகைய தவறு நிகழாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அம்மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இம்முறை 21 போட்டிகளில் பங்குகொள்வதற்காக 143 போட்டியாளர்களை தென்கொரியா அனுப்பியுள்ளது.
அதேசமயம் 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வடகொரியா 16 விளையாட்டாளர்களை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.