ஆபிரிக்கக் குடியரசில் இரண்டு அதிகாரிகளை மீட்ட இலங்கை விமானப்படை!
மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் சேவையாற்றும் இலங்கை விமானப்படை விமானப் பிரிவு, இம்மாதம் 15 ஆம் திகதி செமியோ (Semio) பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல் நிலையின்போது காயமடைந்த, ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு அதிகாரிகளை அவசரமாக வெளியேற்றும் நடவடிக்கையை (CASEVAC) முன்னெடுத்திருந்தது.

இதன்போது Mi-17 ரக ஹெலிகொப்டர் ஒன்றைப் பயன்படுத்தி, செமியோ நடவடிக்கை முகாமிலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எதிரிகளின் நடவடிக்கைப் பிரதேசத்தில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்ய விமானப் பணிக்குழாத்தினரால் முடிந்தது என விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் பிரதான விமானியாக விங் கமாண்டர் நெல்சன் த சில்வா செயற்பட்டதுடன், உதவி விமானியாக பிளைட் லெப்டினன்ட் அருணோத ஏகாநாயக்க ஆகியோர் செயற்பட்டனர்.
விமானப் பணிக்குழாம் மற்றும் மருத்துவக் குழுவினர், காயமடைந்த அதிகாரிகளுக்கு ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் கொண்ட விமானப் பயணத்தின் போது தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
விமானப் பயணத்தின் பின்னர் காயமடைந்த அதிகாரிகள் பாதுகாப்பாக மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக பங்குயி (Bangui) நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.