பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு!
பிரிட்டனால் கட்டாயமாக ஆபிரிக்க நாடான எஸ்வாத்தினிக்கு அனுப்பப்பட்ட 35 வயதுடைய இலங்கை அகதி கிஷாந்த் பெருமாள்யா, அங்கு சென்ற சில மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கடுமையான மனநலப் பாதிப்புகளைக் கொண்டிருந்த அவர், 2021ஆம் ஆண்டு கனடாவுக்குக் கடல் வழியாகச் செல்ல முயன்றபோது பிரிட்டிஷ் கடற்படையினரால் மீட்கப்பட்டு, டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பாலியல் குற்றவாளி
அகதிக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும், பாலியல் தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களில் அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்ததால், அவரை பிரிட்டனுக்குள் அனுமதிக்க அரசாங்கம் மறுத்திருந்தது.
இதனையடுத்து, அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லாத எஸ்வாத்தினி நாட்டிற்கு அவர் அனுப்பப்பட்டார். அவரது தங்குமிடம் மற்றும் மருத்துவப் பராமரிப்புக்கான செலவுகளை மூன்று ஆண்டுகள் வரை ஏற்றுக்கொள்ள பிரிட்டன் இணங்கியிருந்தது.
இந்த ஏற்பாடு தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கோ, எஸ்வாத்தினியின் உள்ளூர் சமூகத்திற்கோ தகவல் வெளியிடப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.
“எனது சகோதரர் அங்கு செல்லவே விரும்பவில்லை. அவர் மிகவும் தனிமையில் இருந்தார்” என அவரது சகோதரி தெரிவித்துள்ளார். அவரது மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம் கோரியுள்ள நிலையில், ஐ.நா. அகதிகள் அமைப்பும் கவலை வெளியிட்டுள்ளது.
மறுபுறம், பாலியல் குற்றங்களில் தண்டிக்கப்பட்ட ஒருவரைத் தமது நாட்டிற்கு அனுப்பியமை குறித்து எஸ்வாத்தினியின் பெண்கள் பாதுகாப்பு அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பிரிட்டிஷ் மக்களின் பாதுகாப்பே தனது முதலாவது முன்னுரிமை என பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் அகதிகளின் பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச குடியேற்ற ஒப்பந்தங்களின் வெளிப்படைத்தன்மை தொடர்பாக முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.