இலங்கையில் 90 ரூபாய்க்காக 5 இலட்சம் ரூபாயை இழந்த வர்த்தகர் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையின் பயனாக, அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த பிரபல பல்பொருள் அங்காடிக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த பல்பொருள் அங்காடியில், சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்குப் புகார்கள் கிடைத்தன.

விலை மோசடி
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, விலை மோசடி இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டது.
அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோ உள்ளூர் 'நாடு' அரிசியின் கட்டுப்பாட்டு விலை 230 ரூபாய் ஆகும். இருப்பினும், குறித்த அங்காடியில் ஒரு கிலோ அரிசி 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு கிலோ அரிசிக்கு 90 ரூபாய் வீதம் பொதுமக்களிடம் இருந்து மேலதிகமாக அறவிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நுகர்வோரை ஏமாற்றிய குற்றத்திற்காக குறித்த வர்த்தக நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.