உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை கனடா நிறுத்தாது! ஜஸ்டின் ட்ரூடோ
இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவருக்கும் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை கனடா நிறுத்தாது என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் அதாவது மே 18ஆம் திகதியன்று நினைவுக்கூரப்பட்டது.
இதனை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுதப் போரின் போதான உயிரிழப்புகள்
அதில் மேலும், இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை நாங்கள் சிந்திக்கிறோம்.
முள்ளிவாய்க்காலில் படுகொலையின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், மேலும் பலர் காணாமல் போனவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்கள்.
இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்கிறார்கள். இதன் காரணமாகவே கடந்த ஆண்டு கனேடிய நாடாளுமன்றம் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக பிரகடனப்படுத்தும் பிரேரணையை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பணி
மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவ சுதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை இலங்கை ஏற்றுக் கொள்வது என்பது எதிர்வரும் ஆண்டுகளில், அந்த நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கான அத்தியாவசிய கூறுகளாகும்.
இந்த நிலையில் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பணியைத் தொடர்வோம்.
மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில், நான்கு இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக எமது அரசாங்கம் தடைகளை விதித்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கனடா அரசாங்கத்தின் சார்பாக, தமிழ் - கனேடியர்கள், நாட்டிற்கு ஆற்றிய பல பங்களிப்புகளை அங்கீகரிக்க அனைத்து கனேடியர்களையும் தாம் அழைப்பதாக கூறியுள்ள அவர், இலங்கையின் ஆயுத மோதலின் தாக்கம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.