இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல் ; டிரம்ப் குற்றச்சாட்டுக்கு ஈரான் பதிலடி
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா கடற்பகுதியில் இந்திய மாலுமிகளுடன் பயணித்த கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே குற்றச்சாட்டு, மறுப்புகள் பரிமாறப்பட்டுள்ளன.
இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகவும், ஈரானின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், டிரம்பின் குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்துள்ளது.

உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் அமெரிக்கா இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஈரான் பதிலளித்துள்ளது.
இதனிடையே, ஓமன் வளைகுடா பகுதியில் பயணித்த எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
கடற்பரப்பில் அப்பாவி மாலுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சர்வதேச கடல்சார் சுதந்திரத்திற்கும் உலக அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடற்பாதுகாப்பு மற்றும் சர்வதேச கடல் போக்குவரத்து தொடர்பான இந்த விவகாரம், அமெரிக்கா – ஈரான் உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.