ஹோர்முஸ் நீரிணை விவகாரம் ; ஈரானுக்கு டிரம்ப் விடுத்த முக்கிய எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதிலும், மேற்காசியாவில் நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதிலும் ஈரான் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நியூயோர்க்கில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் 81ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றியபோதே டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
உலகளாவிய மோதல்கள், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் ஏற்படும் சவால்கள், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இம்முறை பொதுச் சபை விவாதத்தில் முக்கிய இடம்பிடித்துள்ளன.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதிலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதிப் பேச்சுகளை நடத்துவதிலும் ஈரான் தாமதித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் நிறைவடையும் வரை இந்த விவகாரத்தை ஈரான் இழுத்தடிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனினும், ஈரான் தொடர்பான தனது கொள்கையில் இடைக்காலத் தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் டிரம்ப் கூறினார். ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, ஈரானுடன் புதிய உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதா அல்லது கடுமையான நடவடிக்கையை முன்னெடுப்பதா என்பது தொடர்பில் முக்கியமான முடிவை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் அழுத்தத்தைத் தளர்த்தி ஈரான் மீதான முற்றுகையை நீக்கினால், ஹோர்முஸ் நீரிணையை சில நாட்களுக்குள் மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக ஈரான் தரப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
ஐ.நா. பொதுச் சபை அமர்வில் டிரம்ப் உரையாற்றியபோது, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் அவையில் கலந்துகொள்ளவில்லை.

ஈரான் சார்பில் பங்கேற்றிருந்த பிரதிநிதிகள் குழுவினரும் டிரம்ப் உரை ஆரம்பித்த சில நிமிடங்களில் அவையிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், டிரம்பின் உரைக்குப் பின்னர் அமெரிக்க மற்றும் ஈரான் பிரதிநிதிகளுக்கு இடையே நியூயோர்க்கில் சுமார் மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக டிரம்ப் தெரிவித்தார். இந்த சந்திப்பு “மிகவும் சிறப்பாக” அமைந்ததாக அவர் கூறியதுடன், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையும் விரைவில் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தனது தொடக்க உரையில், தற்போதைய உலக சவால்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என வலியுறுத்தினார்.
குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படாதது நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி, பருவநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய மோதல்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.