வைரல் காணொளிக்காக சுகாதார விதிமீறல் ; 19 வயது மாணவருக்கு அபராதம்
சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் தோடம்பழப் பானம் வழங்கும் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயது மாணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், சிங்கப்பூரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் அமைந்திருந்த தோடம்பழப் பானம் வழங்கும் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை மாணவர் சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் கையாண்டு, பின்னர் அதனை மீண்டும் அதே இடத்தில் வைத்துள்ளார்.

இந்தச் செயலை அவர் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
குறித்த காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அவர் மீது பொது இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மாணவருக்கு, அவரது இளம் வயது மற்றும் ஆரம்ப கட்டத்திலேயே குற்றத்தை ஏற்றுக்கொண்டமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சிறைத்தண்டனை விதிக்காமல் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த நிறுவனம் இயந்திரத்தை முழுமையாகச் சுத்தம் செய்ததுடன், அதில் பயன்படுத்தப்பட்டிருந்த சுமார் 500 உறிஞ்சுகுழாய்களையும் அகற்றி புதியவற்றை பொருத்தியுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தனித்தனியாகப் பொதி செய்யப்பட்ட உறிஞ்சுகுழாய்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.