இங்கிலாந்தில் தங்கும் விடுதியில் மாணவி கொலை; தீவிர விசாரணையில் பொலிஸார்
இங்கிலாந்தில் தங்கும் விடுதியில் மாணவி கொலையான விவகாரத்தில் ஆண் நண்பரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கிளெர்கென்வெல் பகுதியில் செபாஸ்டியன் தெருவில் மாணவர்கள் தங்கி படிக்க கூடிய ஆர்பர் ஹவுஸ் என்ற பெயரிலான விடுதி ஒன்று உள்ளது.
மாணவ, மாணவிகள் என பலர் தங்கி உள்ளனர். இதில், அந்நாட்டை சேர்ந்த சபீதா தன்வானி (Sabita Dhanwani) என்ற மாணவியும் தங்கியுள்ளார். அவர், சிட்டி பல்கலை கழகத்தில் மனோதத்துவயியல் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், விடுதியில், கழுத்தில் கடுமையான காயங்களுடன் தன்வானி (Sabita Dhanwani) கிடந்து உள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் உடனடியாக புறப்பட்டு சம்பவ பகுதிக்கு வந்தனர்.
அவசரகால சிகிச்சை அளித்தும் தன்வானி (Sabita Dhanwani) யை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவத்தில் மாணவியின் ஆண் நண்பரான மெஹர் மாரூப் (Mehr Maroop) என்பவரை சந்தேக அடிப்படையில் பொலிஸார் தேடி வந்தனர்.
சம்பவம் நடந்தபோது, தன்வானியுடன் மெஹர் இருந்திருக்க கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. துனிசியா நாட்டை சேர்ந்த அவர், லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜ்ஷைர் பகுதியுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு அடிக்கடி சென்று வருபவர் என பொலிஸார் தெரிவித்து உள்ளனர்.
சம்பவ பகுதியில் கிடைத்த சி.சி.டி.வி. காட்சியில் மெஹர் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் போலீசார் வெளியிட்டு உள்ளனர். இந்நிலையில், மெஹரை (Mehr Maroop) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் மீது அவர் தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த படுகொலைக்கான காரணம் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. தொடர்ந்து மெஹரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.