சூடான் உள்நாட்டுப் போர் ; ட்ரோன் தாக்குதல்களில் 300க்கும் மேற்பட்டோர் பலி
சூடான் ராணுவம் நடத்தியதாகக் கருதப்படும் அடுத்தடுத்த ட்ரோன் (Drone) தாக்குதல்களில், துக்க வீட்டிற்குச் சென்றவர்கள் மற்றும் சந்தையில் இருந்த பொதுமக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கொடூரமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சூடான் ராணுவத்திற்கும், 'விரைவு ஆதரவுப் படை' (RSF) என்ற துணை ராணுவப் படைக்கும் இடையே வீரியமடைந்துள்ள உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாகவே இந்த விபரீதத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

துக்க வீட்டில் தொடர் குண்டுவீச்சு: மேற்கு கோர்டோஃபான் (West Kordofan) மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் மட்டும் 150 பேர் உயிரிழந்ததாக ‘சூடான் போர் அவ்சர்வேட்டரி’ (Sudan War Observatory) அமைப்பு தெரிவித்துள்ளது.
தெற்கு கோர்டோஃபானில் உள்ள ராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியான கடுக்லியிலிருந்து இந்த ட்ரோன்கள் ஏவப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அஞ்சலி நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக சுமார் 200 பேருடன் பயணித்த லொறி ஒன்று அல்-தபாப் (Al-Dabab) நகரை வந்தடைந்தபோது, அதன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் லொறியில் பயணித்த 145 பேரும், அஞ்சலிக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் மீது விழுந்த குண்டில் மேலும் 5 பேரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதே மாலையில், அல்-முஜ்லாத் (Al-Mujlad) நகரில் உள்ள சந்தை ஒன்றின் மீதும் ராணுவத்தின் ட்ரோன்கள் குண்டுவீச்சு நடத்தின.
அபியே எல்லைப் பகுதியில் பேரழிவு: இதனிடையே, சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க சர்ச்சைக்குரிய பகுதியான ‘அபியே’ (Abyei) நகரின் அமியத் (Amiet) சந்தையைக் குறிவைத்துத் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.

ஆர்.எஸ்.எஃப் (RSF) படையினருக்கான எரிபொருள் விநியோக மையமாக இந்தச் சந்தை செயல்பட்டதால் இத்தாக்குதலை நடத்தியதாக ராணுவத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
இத்தாக்குதலால் சந்தைப் பகுதி முற்றிலும் தீக்கிரையாகியுள்ளதுடன், அங்கிருந்த வீடுகளுக்கும் தீ பரவியுள்ளது.
தூதருக்கு அழைப்பு - சர்வதேசக் கவலை: ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைகள் நிலைகொண்டுள்ள பகுதி என்பதால், அங்கீகரிக்கப்படாத எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தெற்கு சூடானை கடும் கோபமடையச் செய்துள்ளது. இது தொடர்பாகத் தனது நாட்டின் முறையீட்டைப் பதிவு செய்யச் சூடான் தூதருக்குத் தெற்கு சூடான் அழைப்பு விடுத்துள்ளது.
இத்தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்தீபன் டுஜாரிக் (Stéphane Dujarric), "பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான உயிர்க்கொல்லி ட்ரோன் தாக்குதல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன.
சூடானில் சுமார் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியையும் பஞ்சத்தையும் எதிர்கொண்டுள்ள சூழலில் இந்த வான்வழித் தாக்குதல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.