வெளிநாடொன்றில் சிறையில் திடீர் தீவிபத்து: 3 கைதிகள் உயிரிழப்பு
பிரேசிலில் உள்ள சிறைச்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலில் சாண்டா கேதரினா மாகாணத்தில் புளோரியன்போலிஸ் என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (15-02-2023) திடீரென தீ ஏற்பட்டுள்ளது.
இந்த தீ வேகமாக பரவத்தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் பரவவிடாமல் தடுத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 3 கைதிகள் உயிரிழந்தனர்.
அவர்கள் தீ விபத்தினால் எழுந்த கரும்புகையை சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
மேலும் 43 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தச் சிறைச்சாலையில் ஒரு அறையில் மெத்தையில் ஏற்பட்ட தீ தான் பரவியதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்து தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.