இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் ; ஆடைகளை களைந்து கொடூரமாக தாக்கிய கும்பல்
அயர்லாந்தில் இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் அயர்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) அயர்லாந்தின் டப்ளின் நகரில் தல்லாக்ட் பகுதியில் வைத்து அவர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
ஆடைகளை களைந்து தாக்குதல்
அவரது ஆடைகளை கிழித்து அந்த கும்பல் ரத்த காயங்கள் ஏற்படும்படி தாக்கியுள்ளது. குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவை ஆன்லைனிலும் பரப்பப்பட்டன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு ஆளானவர் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட மீட்கப்பட்டு, தல்லாக்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பொலிஸார் இதை ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதி விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவரை சந்தித்த உள்ளூர் கவுன்சிலர், அவர் அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தாக்குதலை மோசமானது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என உள்ளூர் அரசியல் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.