வடக்கு ஒன்ராறியோவில் அதிகரிக்கும் அச்சுறுத்தல்: சிறார்கள் பாதிப்பு
வடக்கு ஒன்ராறியோவில் சிறார்களும், 30 வயதுக்கு உட்பட்ட தடுப்பூசி பெறாதவர்களுக்கும் கொரோனா பாதிப்பு அதிகம் கணப்படுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாடு, வடக்கு ஒன்ராறியோவில் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
Porcupine சுகாதாரத்துறை கணிப்பின் படி 100,000 பேர்களில் 290 பேர்களுக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இது பிராந்திய சுகாதாரத்துறை கட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ள எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் காணப்படுவது Timmins பகுதிகள், ஜேம்ஸ் பே மற்றும் ஹட்சன் பே பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனிடையே, குடியிருப்பாளர்கள் தங்கள் தொடர்புகளை கட்டுப்படுத்தவும் பொது சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.
ஒட்டுமொத்த பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக கூறும் அதிகாரிகள், ஆனால் எப்போது கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்பதில் உறுதி கூற முடியாது என்கின்றனர்.
புதிதாக 17,162 பேர்களை சோதனைக்கு உட்படுத்தியதில், பீல் பிராந்தியத்தில் 62, ரொறன்ரோவில் 60 மற்றும் வாட்டர்லூ பிராந்தியத்தில் 45 பேர்களுக்கு புதிதாக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 433 பேர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 184,989 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.