பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைப்பால் அரிதாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பட்டம் ஒன்றை தலிபான்கள் முறியடித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உரிமைகள் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட பெண்களை, வானத்தில் துப்பாக்கியால் சுட்டு கலைத்துள்ளனர்.
மேலும், அவர்களின் மொபைல்போன்களை பறித்துள்ளதுடன், அவர்களை துரத்தியடித்துள்ளனர். தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் பெண்கள் உரிமைகள் மொத்தமாக நசுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், உணவு, வேலை மற்றும் சுதந்திரம் என முழக்கமிட்டுள்ளனர். மட்டுமின்றி, ஆகஸ்டு 15 கருப்பு தினம் என பொறிக்கப்பட்ட பதாகையை ஏந்தியிருந்தனர்.
2021ல் தலிபான் ஆட்சியை கைப்பற்றிய நாள் என்பதால், பதாகையில் கருப்பு நாள் என குறிப்பிட்டுள்ளனர். தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஓராண்டில், பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
பெரும்பாலான அரசு வேலைகள், இடைநிலைக் கல்வி மற்றும் ஆண் துணை இல்லாமல் 45 மைல்களுக்கு (70 கிமீ) பயணம் செய்வதைத் தடைசெய்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், தலிபான்கள் உக்கிரமாகவே நடந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.