தலிபான்களின் முக்கிய மத குரு படுகொலை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி மரணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான் வட்டாரங்கள் இது தொடர்பில் தெரிவிக்கையில், காபூலில் வியாழக்கிழமை நடைபெற்ற மதக்கூட்டத்தில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஹக்கானி கொல்லப்பட்டார். இதனை ஆப்கன் தலைநகர் உளவுத் துறை தலைவர் அப்துல் ரஹ்மான் நேரில் சென்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர் ஏற்கெனவே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி கால்களை இழந்து செயற்கை கால் பொருத்தப்பட்டவர். தலிபான்கள் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கடந்த 2020ல் ஐஎஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஹக்கானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.