பேச்சுவார்த்தைகள் பொய்யானது ; ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை
அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய அதிகாரிகள் "விவேகமாக சிந்திக்க வேண்டும்" என்று ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியிலேயே டெஹ்ரான் மீது வொஷிங்டன் தாக்குதல்களை நடத்திய வரலாற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பேச்சுவார்த்தைகள் குறித்து அவர்கள் பொய் சொல்வது இது முதல் முறையல்ல" என்று கோவ்சாரி தெரிவித்துள்ளார்.
மேலும், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு போன்றவர்கள் இயல்பாகவே பொய்யர்கள் என்றும், மக்களிடையே பிளவுகளை விதைப்பதே அவர்களின் நோக்கம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், ஈரான் இராணுவத்தில் மேஜர் ஜெனரலாகவும் பதவி வகிக்கும் அவர், "அதிகாரிகள் மீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவும், உண்மையில் எந்த முன்னேற்றமும் இல்லாத போது ஏதோ சாதிக்கப்பட்டது போன்ற பிம்பத்தை உருவாக்கவும் அவர்கள் முயல்கிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.