மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம் ; இஸ்ரேல் புதிய நடவடிக்கை
ஈரான் மற்றும் லெபனானை இலக்காகக் கொண்ட இராணுவத் தாக்குதல்களைத் தொடர்வதற்கான திட்டங்களுக்கு இஸ்ரேலிய இராணுவத் தளபதி எயல் ஜமீர் (Eyal Zamir) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலிய இராணுவம் ஈரான் மீது நடத்திய சக்திவாய்ந்த தாக்குதல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
அத்துடன் இந்தத் தாக்குதல்கள் ஈரானின் பாதுகாப்புத் திறன்களைக் கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு அல்லது தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள எந்தவொரு விவகாரத்திலும் ஈரான் வெற்றி பெறுவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது.
இந்த நிலையில், எந்த நேரத்திலும் ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு வலுவான தாக்குதலைத் தொடுக்க இஸ்ரேலிய இராணுவம் முழு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.