பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு; 4 பேர் பலி; 30 பேர் படுகாயம்
பயங்கர குண்டுவெடிப்பு நடந்த பலூசிஸ்தான் பகுதி, ஈரான் - ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற திடீர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியாகினர்.
அவர்கள் நால்வரும் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களாவர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களாவர்.
அவர்களுள் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி தாக்குதலுக்கு பலூசிஸ்தான் முதல்-மந்திரி மீர் அப்துல் குத்தூஸ் பிசெஞ்ஜோ (Mir Abdul Qutb Bisenjo) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குண்டுவெடிப்பு நடந்த பலூசிஸ்தான் பகுதி, ஈரான் - ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு நீண்ட காலமாகவே பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பலூச் கிளர்ச்சிக் குழுக்கள் இதற்கு முன்பு சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை குறிவைத்தும் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்களை குறிவைத்தும் பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.