அமெரிக்காவில் துணை ஜனாதிபதியின் வீட்டின் முன் அகதிகளை தங்கவைத்த கவர்னர்!
தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் (Kamala Harris) வீட்டின் முன்பு டெக்சாஸ் மாகாணத்தின் கவர்னரான குடியரசு கட்சியை சேர்ந்த கிரெக் அபோட் இறக்கிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து தெரியவருவது,
தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் மெக்சிகோ நாட்டின் வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவது தொடர்கதையாக உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதாக எதிர்க்கட்சியான குடியரசு கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இதனால் பைடன் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குடியரசு கட்சியை சேர்ந்த கவர்னர்கள் சிலர் தங்களது மாகாணங்களுக்கு வரும் அகதிகளை வாஷிங்டனுக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணத்தின் கவர்னரான குடியரசு கட்சியை சேர்ந்த கிரெக் அபோட், சுமார் 50 அகதிகளை தனது சொந்த செலவில் பஸ் மூலம் வாஷிங்டனுக்கு அனுப்பினார்.
பின்னர் அந்த அகதிகள் வாஷிங்டனில் துணை ஜனாதிபதி கமலா ஹாரீசின் வீட்டின் முன்பு இறக்கி விடப்பட்டனர்.
கடும் குளிருக்கு மத்தியில் அகதிகள் அனைவரும் கமலா ஹாரீசின் வீட்டின் முன்பு தங்கினர்.
இதுபற்றி கிரெக் அபோட் கூறுகையில்,
"அவர்களின் குடியேற்றச் சட்டங்கள் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் அளவுக்கு வலுவாக இல்லை என்பதை ஜோ பைடன் அரசுக்கு நினைவூட்டுவதற்காக இதை செய்தேன்" என கூறினார்.