பௌத்த பிக்குகளை காதல் வலையில் சிக்க வைத்து பணம் பறித்த பெண் கைது
தாய்லாந்தில், "மிஸ் கோல்ஃப்" என அழைக்கப்படும் ஒரு பெண், குறைந்தது ஒன்பது பிக்குகளுடன் பாலியல் உறவு பேணி, அந்த சம்பவங்களை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதிவு செய்து, அவர்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து பொலிஸார் இது தொடாபான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த பெண் சுமார் 385 மில்லியன் பாட் (அமெரிக்க டொலரால் சுமார் 11.9 மில்லியன்) வரை கப்பமாக பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
மிஸ் கோல்ஃப்-இன் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது, 80,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.
பல பிக்குகளிடம் இருந்து பணம்
அவை பிக்குகளை மிரட்ட பயன்படுத்தப்பட்டதாகவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம், கடந்த சில ஆண்டுகளில் தாய்லாந்து பௌத்த மத அமைப்பை உலுக்கிய பல சர்ச்சைகளில் ஒன்றாகும். இதற்கு முன், பிக்குகள் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், மோசடி உள்ளிட்ட புகார்களில் ஈடுபட்டமை குறித்த தகவல்கள் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024 மே மாதத்தில், பாங்காக் நகரில் உள்ள ஒரு பிக்குவுடன் மிஸ்ஸ் கோல்ஃப் உறவு கொண்டதாகவும் பின்னர் அந்த பிக்குவின் குழந்தையை பெற்றதாகக் கூறி ஏழு மில்லியன் பாட் பணத்தை கேட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், விசாரணைகளின் போது இதே மாதிரியான முறையில் பல பிக்குகளிடம் இருந்து பணம் பெறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடி மூலம் பெற்ற பணங்களில் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டிருப்பதும் போலீசார் தெரிவித்தனர்.
மிஸ்ஸ் கோல்ஃப் தற்போது மிரட்டல், பணச் சலவைக் குற்றம் மற்றும் திருடப்பட்ட சொத்துகளை பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பிக்குகள் சார்ந்த ஒழுக்க மீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க விசேட அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தால், தாய்லாந்து பௌத்த உச்ச சபை (Sangha Supreme Council) பிக்குகளின் ஒழுக்க விதிகளை மீளாய்வு செய்ய விசேட குழுவை அமைக்க முடிவு செய்துள்ளது.