நன்றி…நாங்கள் உங்களை நேசிக்கின்றோம்; துப்பாக்கியை பறித்த அவுஸ்திரேலியருக்கு குவியும் வாழ்த்து
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பிரபலமான போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகச் சம்பவத்தின் போது, தாக்குதலாளிகளில் ஒருவரை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றிய அஹமட் அல் அஹமட் மீது பாராட்டுகளும் நன்றியும் குவிந்து வருகின்றன.
இந்த வீரதீரச் செயலின் பின்னர், சதர்லாண்டில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள அவரது வர்த்தக நிலையத்தின் முன்பகுதி, ஒரு நினைவுச் சின்னம் போலவே மாறியுள்ளது.

மக்களின் மனதில் உண்மையான தேசிய ஹீரோ
பொதுமக்கள் தொடர்ந்து அங்கு வந்து, நன்றி தெரிவிக்கும் செய்திகளையும், மலர்களையும் வைத்து அஹமட்டுக்கு தங்கள் மரியாதையை வெளிப்படுத்தி செல்கின்றனர்.
இது அஹமட்டின் கடை. அவர் செய்த செயல் எங்கள் மனதை தொட்டுள்ளது. அவர் உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதர். எங்களுக்கு ஏதேனும் தேவையெனில் எப்போதும் உதவ தயாராக இருப்பவர் என பெண் ஒருவர் தெரிவித்தார். நன்றி தெரிவிக்கப்பட்டு அவரது கடைக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள செய்திகளில்,

“நன்றி… நாங்கள் உங்களை நேசிக்கின்றோம்”, “நீங்கள் தான் அவுஸ்திரேலியாவின் உண்மையான ஹீரோ”, “நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகின்றோம் – சதர்லாண்ட் மக்கள்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் பலர் அவரது கடைக்கு முன்னால் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அவரது துணிச்சல் மற்றும் மனிதநேயத்தைப் பற்றி பேசிக்கொள்கின்றனர்.
ஒரு சாதாரண குடிமகனாக இருந்தும், ஆபத்து நேரத்தில் தன்னலமின்றி செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய அஹமட் அல் அஹமட், இன்று அவுஸ்திரேலிய மக்களின் மனதில் உண்மையான தேசிய ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார்.
