தாக்குதல் நடத்தியவர் ஒரு மிருகம் ; கடும் சினத்தில் ட்ரம்ப்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார்.
இச்சம்பவத்துக்கு தாக்குதல் நடத்திய நபர் ஒரு மிருகம் என ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2 வீரர்கள் படுகாயம்
இந்த தாக்குதல் வெள்ளை மாளிகையின் வடமேற்கே உள்ள ஒரு மெட்ரோ நிலையம் அருகே நடந்தது. இதில் மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த தேசிய காவல்படையின் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
முதலில் பெண் காவலர் மீது துப்பாக்கிசூடு நடத்திய அந்த வாலிபர் பின்னர் மற்றொரு காவலரையும் சுட்டுள்ளார். உடனே மற்ற பாதுகாப்பு படை வீரர்கள், தாக்குதல் நடத்திய நபர் மீது துப்பாக்கியால் சுட்டு அவரை மடக்கி பிடித்தனர்.
படுகாயம் அடைந்த 2 பாதுகாப்பு படை வீரர்களை வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர்களுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
ரஹ்மானுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பமான சூழலின்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என்றும் அப்போதைய அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தின் திட்டமான ஆபரேஷன் அல்லீசஸ் வெல்கம் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் துப்பாக்கிசூடு நடத்திய காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடந்த போது வெள்ளை மாளிகை யில் அதிபர் டிரம்ப் இல்லை. அவர் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ பண்ணை வீட்டில் இருந்தார்.
இச்சம்பவத்துக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, துப்பாக்கி சூடு சம்பவம் நமது சிறந்த தேசிய காவல்படை வீரர்கள் மீதான கொடூரமான தாக்குதல் ஆகும்.
தாக்குதல் நடத்திய நபர் ஒரு மிருகம். அவர் காயமடைந்திருந்தாலும் அந்த மிருகம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். இது ஒரு தீய, வெறுப்பு மற்றும் பயங்கரவாத செயல்.
முந்தைய ஜோபைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களை சரியாக ஆய்வு செய்யவில்லை என்றார். இதற்கிடையே வாஷிங்டன் நகரத்துக்கு மேலும் 500 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.