பிரான்ஸில் வித்தியாசமான தொழில் வழக்கு ; 20 ஆண்டுகள் பணி இன்றி இருந்த பெண்ணின் வழக்கு
பிரான்ஸின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Orange நிறுவனத்தில் பணியாற்றிய லாரன்ஸ் வான் வாசன்ஹோவ் (Laurence Van Wassenhove) என்ற பெண், எந்தவிதமான பணிகளும் வழங்கப்படாமல் கடந்த 20 ஆண்டுகளாக முழுச் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
வலிப்பு நோய் மற்றும் பக்கவாத பாதிப்புகளைக் கொண்ட லாரன்ஸ், 1993 ஆம் ஆண்டு பிரான்ஸ் டெலிகாம் நிறுவனத்தில் (பின்னர் Orange என மாற்றப்பட்டது) மனிதவளத் துறை மற்றும் செயலாளர் பணிகளில் இணைந்தார்.

2002 ஆம் ஆண்டு தனது குழந்தைகளுக்கு அருகில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் அவர் பணியிட மாற்றம் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட புதிய பணிச்சூழல் தனது உடல்நிலை தேவைகளுக்கு பொருத்தமானதாக இல்லை என அவர் தெரிவித்தார்.
இதன் பின்னர், அவர் பணியில் இருந்து விலக்கப்பட்டு காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டதாகவும், இருப்பினும் நிறுவன ஊழியராகத் தொடர்ந்து இருந்து முழுச் சம்பளம் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், நீண்ட காலமாக தனக்கு எந்தவிதமான முறையான பணிகளும் வழங்கப்படவில்லை என லாரன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். "வீட்டில் இருந்து எதுவும் செய்யாமல் சம்பளம் பெறுவது ஒரு சலுகை அல்ல.
இந்த நிலைமையை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது" என அவர் தெரிவித்துள்ளார்.

பணிகள் வழங்கப்படாததன் காரணமாக தொழில் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தனது திறமைகளையும் அனுபவத்தையும் பயன்படுத்த முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, Orange நிறுவனம் தரப்பில், லாரன்ஸின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பொருத்தமான பணியை வழங்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் தொடர்ச்சியான மருத்துவ விடுப்புகள் காரணமாக அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படையாக பார்க்கும்போது வேலை செய்யாமல் சம்பளம் பெறுவது சாதகமான நிலை போலத் தோன்றினாலும், பணியிடத்தில் ஒருவருக்கான பொறுப்பு, சமூக தொடர்பு, சுயமரியாதை மற்றும் பங்களிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.