ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ட்ரம்ப் தீர்மானம்
ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாக ட்ரம்ப் தனது 'டிரூத்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய தாம் சம்மதித்துள்ளேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவூதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனக் கூறிய அராக்சி, அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாக அராக்சியின் டெலிகிராம் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.