ஆற்றல் வாய்ந்த நிலையில் சீன பொருளாதாரம்:அதிபா் ஷி ஜின்பிங்
சீன பொருளாதாரம் முன்பைவிட மேலும் உறுதி மற்றும் ஆற்றல்வாய்ந்ததாக உள்ளது என்று அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சீன மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அதிபா் ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்தியில் தெரிவித்ததாவது 2023-இல் கடுமையான சோதனைகளை சீனா கடந்து வந்து பல சாதனைகளைப் படைத்துள்ளது.
இந்த ஆண்டை கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் ஆண்டாக சீனா நினைவில் கொள்ளும்.
அதேவேளையில், வருங்காலத்தின் மீது சீனாவுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.
அதிக தீங்கு அல்லது சேதம் இல்லாமல், கடினமான காலகட்டத்தின் முடிவை சீனா வெற்றிகரமாக எட்டிய நிலையில், சீன பொருளாதாரம் முன்பைவிட மேலும் உறுதி மற்றும் ஆற்றல்வாய்ந்ததாக உள்ளது.
நிகழாண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 75 ஆண்டுகளாக உள்ளது.
இந்நிலையில், சீனாவை மேலும் நவீனமயமாக்கும் நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு உறுதியுடன் முன்னெடுக்கும்.
நிலையான, நீண்டகால பொருளாதார வளா்ச்சியை எட்ட தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சீனாவின் சிறப்பு நிா்வாக பிராந்தியங்களான மகாவ், ஹாங்காங் ஆகியவை தமது தனித்துவமான பலத்தை பயன்படுத்திக்கொள்ள சீனா தொடா்ந்து ஆதரவு அளிக்கும்.
தைவான் சீனா நிச்சயம் மீண்டும் ஒன்றிணைக்கப்படும்.
தைவான் நீரிணை பகுதியின் இருபுறமும் உள்ள அனைத்து சீனா்களும் பொதுவான நோக்கத்துக்காக ஒன்றிணைந்து, சீன தேசத்துக்கு புதிய ஆற்றலை அளிக்கும் பெருமையைப் பகிா்ந்துகொள்ள வேண்டும் என்றாா்.
தம்மை தனி நாடு என்று தைவான் தெரிவித்து வரும் நிலையில், அதை தம்மிடம் இருந்து பிரிந்துபோன மாகாணமாகவே சீனா கருதி வருவது குறிப்பிடத்தக்கது.