கொள்ளுப்பிட்டியில் விபத்து ஏற்படுத்திவிட்டு டுபாய் தப்பிச்சென்ற சாரதி கைது!
கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை விபத்தொன்றினை ஏற்படுத்திவிட்டு, டுபாய்க்கு தப்பிச்சென்றிருந்த 24 வயதான மகிழுந்து சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர் நாடு திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரவு விடுதியொன்றிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சொகுசு மேர்ஸடிஸ் பென்ஸ் ரக மகிழுந்தொன்று கொள்ளுப்பிட்டியில் முச்சக்கர வண்டியொன்றின்மீது மோதியதில் கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்தார்.
அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்ததுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தையடுத்து, மகிழுந்தின் சாரதியான 24 வயதுடைய வர்த்தகர் மொஹமட் ரைசுல் ரிசாக் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்று விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அவரை கைதுசெய்வதற்கு சர்வதேச காவல்துறையினரின் உதவியை பெற இலங்கை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.