சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த கதி!
சிங்கப்பூரில் மரத்திலிருந்து கட்டைகளை வெட்டி லொரியில் வைக்கும்போது ஒன்று கீழே விழுந்து வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணமடைந்தார்.
இச் சம்பவம் 7ஆம் திகதி தோ பாயோ ஈஸ்ட் ரோட்டில் பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் நேர்ந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. சம்பவ இடத்தில் மரத்தை வெட்டிச் சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பங்களாதேஷைச் சேர்ந்த 28 வயது ஆடவர் வெட்டப்பட்ட மரக் கட்டைகளை லாரிக்குள் நகர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். வெட்டிய மரக் கிளைகளைத் தூக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட வாரிலிருந்து ஒரு கட்டை கீழே விழுந்தது.
அது ஊழியர் மீது விழுந்ததில், அவர் நடைபாதையில் தலையை இடித்துக்கொண்டார். டான் டொக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்ததாக அமைச்சு கூறியது.
பணிகளை நிறுத்தும்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வேலையிட மரணங்களின் எண்ணிக்கை 43க்கு அதிகரித்துள்ளது.