அமெரிக்க - ஈரான் மோதலால் சாமானிய மக்களுக்கு நேர்ந்த கதி
ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டு இராணுவ மோதல்களின் பொருளாதாரத் தாக்கம் காரணமாக, அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினதும் மாதாந்த வீட்டுச் செலவுகள் நூற்றுக்கணக்கான டொலர்களால் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மூடீஸ் அனலிட்டிக்ஸ் (Moody’s Analytics) நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி இந்த மோதல் ஆரம்பமானது முதல், அமெரிக்கக் குடும்பமொன்று எரிபொருள் மற்றும் விமானக் கட்டண உயர்வுகளுக்காக சராசரியாக 447.19 டொலர்களை மேலதிகமாகச் செலவிட்டுள்ளதாக சிஎன்பிசி (CNBC) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மோதல் நிலைமை காரணமாக கடந்த மூன்று மாதங்களில் ஒட்டுமொத்தமாக அமெரிக்க நுகர்வோருக்கு சுமார் 60 பில்லியன் டொலர்கள் மேலதிகச் செலவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த போர்ச் சூழல் விரைவில் முடிவுக்கு வராவிட்டால், நுகர்வோர் தங்களின் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்றும், அது ஏற்கனவே பலவீனமடைந்துள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்றும் மூடீஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் மார்க் சாண்டி (Mark Zandi) எச்சரித்துள்ளார்.