பணிப்பெண்ணை சித்திரவதை செய்து மறைக்க முயன்ற பெண் முதலாளி!
சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணைச் சித்திரவதைக்குள்ளாக்கி அவரது தழும்புகளை மறைக்க முயன்ற பெண் முதலாளிக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
38 வயது தீபகலா சந்திரன் சேச்சரன் என்ற பெண்ணுக்கு 10 மாதம், 10 வாரம் சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது. அவர் கொடுமைப்படுத்திய Eni Agustin எனும் பணிப்பெண்ணுக்கு 4,000 வெள்ளி இழப்பீடு கொடுக்கும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பணிப்பெண்ணுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகச் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் தீபகலா மறுத்தார். இந்நிலையில் விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உட்லண்ட்ஸில் (Woodlands) உள்ள தீபகலாவின் அடுக்குமாடி வீட்டில் எனி கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலைக்குச் சேர்ந்தார். 16 நாட்களில் Eni சித்திரவதைக்குள்ளானார்.
சமையலறையில் கரண்டிகளை மாற்றி வைத்ததால் எனியின் நெற்றியைத் தமது விரலால் குத்தித் தீபகலா காயம் ஏற்படுத்தினார். பின்னர் masking tape நாடாவை Eni நெற்றியில் விட்டெறிந்தார்.
வீட்டின் நடைபாதையைச் சுத்தம்செய்ய அரை மணிநேரம் ஆகும் என Eni சொன்னபோது தீபகலா கோபமடைந்து எனியைப் பலமுறை கன்னத்தில் அறைந்தார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
கணவர் குறுக்கிட்ட பின்னரே தீபகலா Eniயை அறைவதை நிறுத்தினார். ஆனால் அதன் பிறகு Eniயைக் கம்பால் அடித்துள்ளார். அதே குடியிருப்பில் வேலை செய்யும் மற்றொரு பணிப்பெண் Eniயின் காயங்களைப் பார்த்து பணிப்பெண்களுக்கான நிலையத்தில் புகாரளித்தார்.
தகவல் பெற்ற பொலிஸார் தீபகலாவின் வீட்டுக்குச் சென்றபோது தீபகலா Eniக்கு முகஒப்பனை செய்து தழும்புகளை மறைத்துள்ளார்.
மேலும் தடித்த ஒப்பனையை அகற்றியதில் Eniயின் முகத்தில் உள்ள தழும்புகள் வெளிப்பட்டன. இதன்போது தீபகலா கைதானார்.