சாவின் விளிம்பில் உள்ள மனைவியின் கனவை நிறைவேற்றிய கணவர்!
அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது 28 வயது மனைவி உயிரிழப்பதற்கு முன், அவரது கனவு டிஸ்னி திருமணத்துடன் பிரித்தானிய கணவர் ஒருவர் ஆச்சரியப்படுத்தினார்.
தென்கிழக்கு லண்டனில் உள்ள கேட்போர்டு (catford) சேர்ந்த அலெக்ஸ்(Alex Fielding) மற்றும் கிர்ஸ்டி பீல்டிங் (Kirsty Fielding) ஜோடி 10 வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு, கடந்த 2019ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
அத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில் ஆண்டின் தொடக்கத்தில் செப்டம்பர் 8ம் திகதி கிர்ஸ்டிக்கு அரியவகை சர்கோமா புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, மேலும் கிரிஸ்டிக்கு 12 முதல் 18 மாதங்கள் மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அலெக்ஸ் மற்றும் கிர்ஸ்டி ஜோடி விரைவாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர், இந்த திருமணம் முற்றிலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என நினைத்த அலெக்ஸ், கிர்ஸ்டியின் கனவான டிஸ்னிலேண்ட் திருமணத்தை நடத்த திட்டமிட்டார்.
இதற்காக GoFundMeயில் திரட்டிய நிதியை கொண்டு, கிரிஸ்டி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ராயல் மார்ஸ்டன் மருத்துவமனையில் அலெக்ஸ் டிஸ்னிலேண்ட் வடிவமைப்பை பிரம்மாண்டமாக உருவாக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
மேலும் அங்கு அலெக்ஸ் மற்றும் கிர்ஸ்டி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிரிஸ்டி மற்றும் அலெக்ஸ் இருவருக்கும் தாமஸ் என்ற 2 வயது மகன் ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.