21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த மோதிரத்தை மனைவிக்கு பரிசாக அளித்த கணவர்!
21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன நிச்சயதார்த்த மோதிரத்தை மீண்டும் மனைவிக்கு பரிசாக அளித்து கணவர் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த நிக் டே என்ற நபருக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது, திருமணத்திற்கு முன்னதாக தனது காதல் மனைவி ஷைனாவுக்கு ஆசையாக வைர மோதிரம் ஒன்றை நிக் டே பரிசாக வழங்கியுள்ளார்.
இதையடுத்து திருமணம் நடைபெற்று இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு காதலி ஷைனா தனது கையில் இருந்த மோதிரத்தை டாய்லெட்டில் தவறவிட்டு இருக்கிறார்.ஆனால் இதனை கணவனிடம் மறைக்க முயற்சி செய்தும் அது முடியாமல் இறுதியில் வைர மோதிரம் டாய்லெட்டில் தவறவிட்டதை நிக் டே-விடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட கணவன் நிக் டே முதலில் கோபமடைந்தாலும், இறுதியில் மோதிரத்தை கண்டுபிடிக்க இருவரும் கடுமையான முயற்சிகள் செய்ய தொடங்கினர்.ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் மோதிரத்தை கண்டுபிடிக்க முடியாததால் நிக் டே மற்றும் ஷைனா தம்பதி வருத்தம் அடைந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் மோதிரம் தொலைந்த வீட்டில் நிக் டேவின் பெற்றோரை குடி வைத்து விட்டு அவர்கள் இருவரும் வேறு ஒரு வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் பழைய வீட்டில் குடியிருந்த நிக் டேவின் தாய் டாய்லெட்டில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதை அறிந்து பிளம்பர் ஒருவரை அழைத்திருக்கிறார்.
அப்போது பழுது வேலையில் ஈடுபட்டு இருந்த பிளம்பர் மோதிரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார், இந்த தகவலை மகன் நிக் டேவிடம் தெரிவிக்கவே, தனது தாய் குடியிருந்த வீட்டிற்கு வந்து நிக் டே விரைவாக வந்துள்ளார்.
21 வருடங்களுக்கு முன்பு தொலைந்த மோதிரத்தை பார்த்த நிக் டே, நேராக தனது மனைவிடம் மோதிரத்தை காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.அதன் பின்னர் அதனை மனைவிக்கு கிறிஸ்மஸ் பரிசாக மீண்டும் கையில் அணிவித்து மகிழ்ந்துள்ளார்.