பிரான்ஸில் மூதாட்டியை கடித்துக்குதறிய பொலிஸாரின் நாய்!
பிரான்ஸில் பொலிஸாரின் மோப்ப நாய் ஒன்று மூதாட்டி ஒருவரை தவறுதலாக கடித்துக்குதறியுள்ளது.
இச்சம்பவம் Caluire-et-Cuire (Rhône) நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அங்குள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது குறித்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையர்கள் வந்து சென்றதுக்குரிய அடையாளங்கள் இருந்ததால், வீட்டுக்குள் பொலிஸார் மோப்ப நாயுடன் நுழைந்தனர்.
வீட்டுக்குள் தாம் நுழைந்துள்ளதாக அறிவித்தல் விடுத்தும், யாரும் பதிலளிக்காததால் மோப்ப நாயின் கழுத்துப்பட்டியை அவிழ்த்துவிட்டு வீட்டை சோதனையிடச் செய்தனர்.
ஆனால் துரதிஷ்ட்டவசமாக அவ்வீட்டின் உரிமையாளராக 90 வயதுடைய பெண்மணி அங்கு இருந்துள்ளார். அவரை எதிர்பார்த்திராத மோப்ப நாய் அவர் மீது பாய்ந்து அவரது முகத்தை கடித்துக்குதறியது.
இதனை எதிர்பார்த்திராக பொலிஸார் நாயை பிடித்ததுடன், குறித்த பெண்மணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் குறித்த பெண்மணி தற்போது நலமுடன் உள்ளார் எனவும், அவர் பொலிஸார் மீது வழக்கு பதிவு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.