பெண்களுக்கு முன்னுரிமை அளித்த ஸ்பெயின் அரசாங்கம்!
ஃபார்ச்சூன் அறிக்கையின்படி, பாலின சமத்துவத்தை நோக்கிய நடவடிக்கையில் ஒரு பகுதியாக நிறுவன வாரியங்களில் குறைந்தது 40 சதவீத பெண் பிரதிநிதித்துவம் தேவைப்படும் சட்டத்தை ஸ்பெயின் அரசாங்கம் நிறைவேற்ற முற்படுகிறது.
பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸின் கூற்றுப்படி, பாலின ஒதுக்கீடு சட்டம் காங்கிரஸுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் மார்ச் 7 அன்று அங்கீகரிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சோசலிஸ்ட் கட்சியின் பேரணியின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அரசாங்கத்தின் ஒரு தனி அறிக்கையின்படி, குறைந்த பிரதிநிதித்துவம் பெற்ற பாலினத்தின் குழுக்கள் குறைந்தபட்சம் 40 சதவீத உறுப்பினர்களைக் கொண்டிருப்பதையும், உயர் நிர்வாகத்திற்கு ஒரே மாதிரியான சமத்துவம் இருப்பதை உறுதி செய்வதையும் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் கருத்துப்படி, தேர்தல் பட்டியல்கள், கார்ப்பரேட் இயக்குநர்கள் குழுக்கள் மற்றும் தொழில்முறை சங்கங்களின் நிர்வாகக் குழுக்கள் அனைத்தும் சம பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பாலின சமத்துவத் தேவைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.
பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ், அரசாங்கம் பெண்ணியத்திற்கு ஆதரவாக ஒரு நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்பெயின் சமூகத்திற்கும் ஆதரவாக உள்ளது என்றார்.
சட்டத்தின்படி, 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 50 மில்லியன் யூரோ ($53 மில்லியன்) ஆண்டு வருவாய் கொண்ட ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட நிறுவனமும் 40 சதவீத பெண் நிர்வாகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
தேர்தல்களுக்கான அனைத்து அரசியல் பட்டியல்களிலும் ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் மாறி மாறி இருக்க வேண்டும் என்பதுடன் அமைச்சரவைக்கு 40 சதவீத ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் ஆணையிடும்.
ஸ்பெயின் பிரதமர் தனது சோசலிஸ்ட் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை பெண்ணியம் என்று பலமுறை வர்ணித்துள்ளார். ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அனுமதிக்கும் சட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் ஆகும்.
மேலும், நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் மசோதாவை நிறைவேற்றினர்.