21 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் காலடிச்சுவடுகள் கண்டுபிடிப்பு
வடக்கு இத்தாலியில் அமைந்துள்ள ஸ்டெல்வோ தேசிய பூங்காவில், சுமார் 21 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் ஆயிரக்கணக்கான காலடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சில காலடிச்சுவடுகள் 40 செ.மீ. (15 அங்குலம்) வரை விட்டமுடையதாக இருப்பதுடன், இணையான வரிசைகளில் தெளிவாகப் பதிந்துள்ளன. பல தடங்களில் விரல்கள் மற்றும் கூர்மையான நகங்களின் அடையாளங்களும் தென்படுகின்றன.

காலடிச்சுவடுகள்
இந்த காலடிச்சுவடுகள், நீண்ட கழுத்து, சிறிய தலை மற்றும் கூரிய நகங்கள் கொண்ட தாவர உணவு உண்ணும் ப்ரோசாரோபோடுகள் எனப்படும் டைனோசர் இனத்தைச் சேர்ந்தவை என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

“நான் வாழும் பகுதியில் இவ்வளவு அற்புதமான கண்டுபிடிப்பைச் சந்திப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த இடம் முழுவதும் டைனோசர்களால் நிரம்பியிருந்தது; இது அளவற்ற அறிவியல் பொக்கிஷம்,” என மிலானைச் சேர்ந்த பண்டைய உயிரியல் நிபுணர் கிறிஸ்டியானோ டெல் சாசோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், புகைப்படக் கலைஞர் எலியோ டெல்லா பெரேரா, மிலானின் வடகிழக்கே உள்ள இந்த பூங்காவில், நூற்றுக்கணக்கான மீட்டர்கள் நீளமான ஒரு செங்குத்தான மலைச் சுவரில் இந்த காலடிச்சுவடுகளை முதன்முதலில் கண்டறிந்தார்.