வெறும் 2 கிராம் மனிதனை கொல்லும்; வலி நிவாரண மருந்தை பேரழிவு ஆயுதம் என டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் பென்டானில் என்ற வலி நிவாரண மருந்தை பேரழிவு ஆயுதம் என வகைப்படுத்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பென்டானில் என்பது செயற்கை முறையில் தயாரிக்கப்படும் வலி நிவாரணி மருந்து ஆகும். இது மருத்துவ உலகில் ஒருபுறம் முக்கிய மருந்தாக உள்ளது. மறுபுறம் தவறாகவும் பயன்படுத்தப்படும்போது, உயிரை பறிக்கும் கொடிய போதைப் பொருளாக மாறுகிறது.

18 முதல் 45 வயதுக்குட்பட்டோரின் மரணம்
அமெரிக்காவில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டோரின் மரணத்துக்கு, பென்டானில் போதைப் பொருளை பயன்படுத்தியது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இம்மருந்து பெரும்பாலும், தென் அமெரிக்க நாடான மெக்சிக்கோ வழியாக அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதாகவும், அதற்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து வருவதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

இதையடுத்து, இம்மருந்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ட்ரம்ப், பென்டானிலை ஒரு பேரழிவு ஆயுதம் என வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
இது தொடர்பில் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளதாவது, பென்டானில் ஒரு போதைப் பொருள் என்பதைத் தாண்டி அது ஒரு வேதியியல் ஆயுதம் போன்றது. வெறும் 2 கிராம் பென்டானில் ஒரு மனிதனை கொல்லப் போதுமானது என்பதால், இது பேரழிவு ஆயுதமாக கருதப்படுகிறது.
எந்த ஒரு குண்டும் செய்யாத சேதத்தை இந்த நச்சு பொருள் செய்து வருகிறது. ஆண்டுக்கு, 2 முதல் 5 இலட்சம் மக்கள் இதனால் மரணமடைகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.