டிரம்பின அதிரடி உத்தரவால் உலக சந்தையில் அதிகரிக்கும் எண்ணெய் விலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெனிசுலா எண்ணெய்க் கப்பல்கள் தொடர்பில் வெளியிட்ட உத்தரவையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெனிசுலாவுக்கு விதிக்கப்பட்ட தடைகளின் ஒரு பகுதியாக, அந்த நாட்டுக்குள் நுழையும் மற்றும் அந்நாட்டிலிருந்து வெளியேறும் தடைசெய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களை தடுக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் எண்ணெய் விலை சுமார் 1 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.
அதன்படி, Brent (பிரெண்ட்) கச்சா எண்ணெய் விலை 87 சதம் அல்லது 1.5 வீதத்தால் உயர்ந்து, ஒரு பீப்பாய் 59.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெய் விலை 85 சதம் அல்லது 1.5 வீதத்தால் உயர்ந்து, ஒரு பீப்பாய் 56.12 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க எண்ணெய் வர்த்தகர்களின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையால் ஒரு நாளைக்கு சுமார் 0.4 முதல் 0.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 1 முதல் 2 அமெரிக்க டொலர் வரை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தடைசெய்யப்பட்ட கப்பல்களுக்கு எதிரான தடையை அமெரிக்கா எவ்வாறு நடைமுறைப்படுத்தும் என்பது தொடர்பில் இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில், அமெரிக்காவின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.