போரை வைத்து ட்ரம்ப் ஆடிய கேம் ; உக்ரைன் கனிம வளங்களை சுருட்டிய அமெரிக்கா
அமெரிக்காவும் உக்ரைனும் ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
உக்ரைனின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.
கனிம ஒப்பந்தம்
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசெட் மற்றும் உக்ரைன் துணைப் பிரதமர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்கா உக்ரைனின் மதிப்புமிக்க அரிய பூமி தாதுக்களான டைட்டானியம், யுரேனியம் மற்றும் லித்தியம் ஆகியவற்றை பெற அனுமதிக்கும். உக்ரைன் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைத் தொடர விரும்பினால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு உக்ரைனை அமெரிக்கா நிர்பந்தித்து வந்தது.
உக்ரைன் தொடர்ந்து அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது. கடந்த பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த சந்திப்பின் போது வாக்குவாதம் வெடித்தது.
அடுத்து வரும் பத்து தலைமுறை உக்ரேனியர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என ஜெலன்ஸ்கி மறுத்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைய வழிவகுத்தது.
அதுமுதல் ரஷ்யாவுக்கு ஆதரவாக டிரம்ப் பேசி வந்தார். ஆனால் கடந்த வாரம் வாடிகனில் போப் ஆண்டவர் இறுதிச் சடங்கில் வைத்து டிரம்ப், ஜெலன்ஸ்கி பேசிக்கொண்டனர். அதைத்தொடர்ந்து கடந்த வாரம் உக்ரைனில் நடந்த ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்த டிரம்ப், ரஷிய அதிபர் புதினை விமர்சித்தார்.
இந்நிலையில் அமெரிக்கா - உக்ரைன் இடையே கனிம ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்கா அதிக வரிவிதித்ததால் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இதனால் உக்ரைனுடனான கனிம ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.