பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் திருட்டு ; இருவர் கைது
பாரிஸில் உள்ள உலகின் அதிகம் பார்வையிடப்படும் லூவர் அருங்காட்சியகத்தில் நடந்த நகைகள் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நாட்டு நேரப்படி இரவு 10 மணியளவில் பாரிஸ்-சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் வெளிநாடொன்றுக்கு செல்ல விமானத்தில் ஏறவிருந்த நிலையில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இரண்டாவதாக, சிறிது நேரத்திலேயே பாரிஸ் பிராந்தியத்தில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையை, உயர்மட்ட கொள்ளைச் சம்பவங்களைக் கையாளும் BRB எனப்படும் பாரிஸ் காவல்துறையின் விசேட பிரிவு விசாரித்து வந்தது.

இந்தத் துணிகரத் திருட்டு, அருங்காட்சியகம் திறந்திருந்த நேரத்தில் நடந்தது.கொள்ளையர்கள் கிரேன் ஒன்றைய பயன்படுத்தி மாடியிலுள்ள ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து, சுமார் பல மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்ட எட்டு நகைகளைத் திருடிய பின்னர், உந்துருளிகளில் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்கள் கட்டுமான தொழிலாளர்கள் பயன்படுத்தும் உடையில் இருந்ததோடு, ஒரு ஹைட்ராலிக் லிஃப்டைப் பயன்படுத்தித் தப்பிச் சென்றமை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருடப்பட்ட நகைகள், பிரான்சின் ராணிகள் மற்றும் பேரரசிகளுக்குச் சொந்தமான, இரண்டு நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்டவை என தெரிவிக்கப்படுகிறது.
இதில் பேரரசி யூஜெனிக்குச் சொந்தமான கிரீடம் மற்றும் முடி அலங்கார நகைகள், பேரரசி மேரி லூயிஸுக்கு திருமணப் பரிசாக வழங்கப்பட்ட நீலக்கற்கள் பதித்த அட்டிகை மற்றும் காதணிகள் ஆகியவை அடங்கும். இவற்றின் மதிப்பைவிட, இவற்றின் "பாரம்பரிய மதிப்பு விலைமதிப்பற்றது" என்று பிரான்ஸ் கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது.