பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ; இந்தியா–பாகிஸ்தான் மோதல் பின் விளைவு
பாகிஸ்தான் அடுத்த ஆறு மாதங்களில் ஐ.எம்.எப்., எனும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் கடந்தாண்டு மே மாதம் 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையால் மோதல் ஏற்பட்டது.
இம்மோதலில், 'ஜே.எப். 17 தண்டர் ஜெட்' ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த விமானங்களை சீனா - பாகிஸ்தான் இணைந்து தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரு தரப்பு மோதலின் போது, இவ்விமானங்களின் செயல் திறனை கண்டு, உலக நாடுகள் இதனை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும், ஆகையால், அடுத்த ஆறு மாதங்களில் சர்வதேச நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் நிதி உதவி கோர வேண்டிய அவசியம் இருக்காது என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கூறினார்.
நிதியத்தின் நிபந்தனை காரணமாக பாகிஸ்தான் தன் அரசு விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்சை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான சில மாதங்களில் இக்கருத்தை கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தற்போது, நிதியத்தின் 24வது திட்டத்தின் கீழ், 95,400 கோடி ரூபாய் கடனுதவி பெற்றுள்ளது.
மேலும், அந்த அமைப்பிடம் இருந்து அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் மொத்த கடன், 27 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.